
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் “லுக் கல்ச்சர் மீடியா” என்ற செயலியின் மூலம் ஏமாற்றப்பட்டுள்ளனர். “20,300 ரூபாய் செலுத்தினால், தினமும் 700 ரூபாய் கிடைக்கும்” என்ற வாக்குறுதியுடன், அந்த செயலியில் உள்ள ஆங்கில நாவல்களைப் படிக்க வேண்டும் என கூறப்பட்டது.
ஆரம்பத்தில் பணம் வரத் தொடங்கியதால் பலரும் தங்கள் உறவினர்கள், நண்பர்களையும் சேர்த்தனர். ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு பணம் வராமல் போனதோடு, பலரது வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டதைக் கண்டும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட ரோஸ்லின் மேரி, பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக புகார் அளித்துள்ளனர். ஒருவருக்கு 2 லட்சம் முதல் 3 லட்ச ரூபாய்வரை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களின் கீழ் பலரை சேர்த்ததற்காக சமூக அழுத்தங்களையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது.
“தங்களுக்கு கீழ் ஆட்கள் சேர்த்தால் போனஸ் வரும்” என்ற கொள்கை மூலம் நம்பிக்கையுடன் பலரும் சேர்ந்தனர். வாட்ஸ்அப் குழு, யுபிஐ முகவரிகள், பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது. “முதலில் பணம் வந்ததால் நம்பிக்கை ஏற்பட்டது; பின்னர் வங்கிக் கணக்கே முடங்கிவிட்டது” என ரோஸ்லின் கூறுகிறார்.
மேலும், “பணம் ஏமாற்றியவர்கள் எவரும் நேரில் தெரியாதவர்கள், வாட்ஸ்அப்பில்தான் தொடர்பு கொண்டார்கள்” எனவும் கூறப்படுகிறது. மதுரை, தூத்துக்குடி, நெல்லை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் இதே போல பாதிக்கப்பட்டுள்ளனர்.
லுக் செயலி நிறுவனம் குறித்து இணையத்தில் தேடியபோதும், உறுதியான தகவல்களே இல்லை. சமூக ஊடக விளம்பரங்களை நம்பி செயலிகளைப் பதிவிறக்கம் செய்வது பெரிய ஆபத்தாக இருப்பதாக, சைபர் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.