அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் ஒரு மாதத்தை நெருங்கியுள்ள நிலையில், உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் செல்ல ஈரான் தடை விதித்துள்ளதால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, பேச்சுவார்த்தை சுமூகமாக முடிய வேண்டும் என்பதற்காக, ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது 5 நாட்களுக்குத் தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் காலக்கெடு விதித்திருந்தார். ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் முக்கிய நிபந்தனையாக உள்ளது.

ஆனால், அமெரிக்காவின் இந்தக் காலக்கெடுவுக்கு ஈரான் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஈரானின் புதிய ராணுவ ஆலோசகர் மோஹ்சென் ரெசாயி கூறுகையில், அமெரிக்காவைப் பாதுகாப்பதற்கான நேரம் முடிந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

“எங்கள் கட்டமைப்புகள் மீது நீங்கள் கை வைத்தால், எங்கள் பதில் தாக்குதல் ‘கண்ணுக்கு கண்’ என்பதாக இருக்காது, ‘கண்ணுக்கு தலை’ என்பது போல மிகக் கோரமாக இருக்கும்” என அவர் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், அமெரிக்காவை வளைகுடா கடலில் மூழ்கடிப்போம் என்றும், இதில் இருந்து தப்பிக்க அமெரிக்காவிற்கு அதிக நேரம் இல்லை என்றும் அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.