மேற்கு ஆசியாவில் போர் 27-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரான் நாடு தற்போது மண்டியிட்டுள்ளதாகவும், உயிருக்கு அஞ்சி ரகசியமாக அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

குடியரசுக் கட்சியின் நிதி திரட்டும் கூட்டத்தில் உரையாற்றிய டொனால்ட் ட்ரம்ப் கூறியதாவது, “ஈரான் தற்போது ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள மிகவும் துடிக்கிறது. ஆனால், அதை வெளிப்படையாகச் சொல்ல அவர்கள் பயப்படுகிறார்கள். அப்படிச் சொன்னால் அவர்களது நாட்டு மக்களாலேயே கொல்லப்படுவோம் என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது. அதே சமயம் எங்களாலும் (அமெரிக்கா) கொல்லப்படுவோம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். தற்போது அவர்கள் ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்றார்.

மேலும் ஒரு அதிரடித் தகவலைப் பகிர்ந்த ட்ரம்ப், “ஈரான் தலைமைப்பீடம் என்னையே அந்த நாட்டின் அடுத்த ‘சுப்ரீம் லீடர்’ பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு முறைசாரா முறையில் கேட்டுக் கொண்டது. ஆனால், ‘வேண்டாம், மிக்க நன்றி, எனக்கு அந்தப் பதவி தேவையில்லை’ என்று கூறி நான் அதை நிராகரித்துவிட்டேன். உலகிலேயே ஈரான் தலைவராக இருக்க விரும்பாத ஒரே நபர் நானாகத்தான் இருப்பேன்,” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

மேலும் கடந்த மாதம் ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் தலைமைப்பீடத்தில் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. அவரது மகன் மொஜ்தபா கமேனி அடுத்த உச்ச தலைவராக அறிவிக்கப்பட்டாலும், போர் தொடங்கியதில் இருந்து அவர் பொதுவெளியில் தோன்றவில்லை. தாக்குதலில் அவர் காயமடைந்திருக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன.

ஈரானை ராணுவ ரீதியாக அமெரிக்கா வீழ்த்திவிட்டதாக ட்ரம்ப் உரிமை கொண்டாடினாலும், போர் நிறுத்தத்திற்காக எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் தாங்கள் ஈடுபடவில்லை என்று ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக மறுப்புத் தெரிவித்துள்ளது. இருப்பினும், ரகசியப் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றமடைந்து வருவதாக ட்ரம்ப் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.