மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்திய சரமாரித் தாக்குதல்களில் 6 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குவைத்தில் உள்ள ஷுவைபா (Shuaiba) துறைமுகத்தில் அமைந்திருந்த அமெரிக்க ராணுவத்தின் தந்திரோபாய செயல்பாட்டு மையத்தை இலக்கு வைத்து ஈரான் நடத்திய தாக்குதலில், அங்கிருந்த 6 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதுமட்டுமின்றி, குவைத்தின் அலி அல்-சலேம் விமானப்படைத் தளம் மற்றும் கேம்ப் பியூரிங்கில் உள்ள எரிபொருள் பராமரிப்பு மையங்களும் ஈரானிய ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களால் உருக்குலைந்துள்ளன. அமெரிக்காவின் கோட்டையாகக் கருதப்படும் வளைகுடா பகுதிகளில் ஈரான் புகுந்து விளையாடியுள்ளது டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கையின்படி, கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய அமெரிக்கத் தளமான அல் உதைத் (Al Udeid) தளத்தின் ரேடார் அமைப்புகள் முற்றிலுமாகச் சூறையாடப்பட்டுள்ளன. மேலும், பஹ்ரைனில் உள்ள அமெரிக்கக் கடற்படையின் 5-வது படைப்பிரிவு தலைமையகம் மற்றும் சவூதி அரேபியாவின் இளவரசர் சுல்தான் விமானப்படைத் தளமும் ஈரானின் ஏவுகணைகளுக்குத் தப்பவில்லை.

அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. தங்களின் நட்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய அமெரிக்காவின் பலவீனம் இந்தத் தாக்குதல்கள் மூலம் அம்பலமாகியுள்ளதாகக் கருதப்படும் நிலையில், இதற்குப் பதிலடியாக ஈரான் மீது ஒரு மிகப்பெரிய தாக்குதலை நடத்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டு வருவதால் போர் மேகங்கள் மேலும் சூழ்ந்துள்ளன.