உலக நாடுகளின் கவனம் முழுவதும் தற்போது மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மீது குவிந்திருக்க, மறுபுறம் ஆசியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டச் சீனா ஒரு மிகப்பெரிய ‘ஸ்கெட்ச்’ போட்டுள்ளது.
தென் சீனக் கடலில் உள்ள ஆன்டிலோப் பவளப்பாறையில் (Antelope Reef) சுமார் 1,490 ஏக்கர் பரப்பளவில் சீனா ஒரு பிரம்மாண்டமான செயற்கைத் தீவை உருவாக்கி வருவதைச் செயற்கைக்கோள் படங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. வியட்நாம் மற்றும் சீனாவின் ஹைனான் மாகாணத்திற்கு இடைப்பட்ட பகுதியில் அமையவுள்ள இந்தத் தீவு, சீனாவின் மிகப்பெரிய செயற்கைத் தீவான ‘மிஸ்சீஃப் ரீஃப்’ அளவிற்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த அக்டோபர் மாதம் முதல் மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் இந்தக் கட்டுமானப் பணிகள், தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் ராணுவப் பலத்தை அச்சுறுத்தும் வகையில் உயர்த்தியுள்ளது.
வாஷிங்டனைச் சேர்ந்த வியூக ஆய்வுகளுக்கான மையம் (CSIS) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தச் செயற்கைத் தீவில் அதிநவீன ஏவுகணைத் தளங்கள், கடலோரப் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் மின்னணுப் போர் கருவிகளை (Electronic Warfare) நிலைநிறுத்தச் சீனா திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே பாரசெல் தீவுகளில் 20-க்கும் மேற்பட்ட ராணுவப் புறக்காவல் நிலையங்களை வைத்துள்ள சீனா, தற்போது ஆன்டிலோப் ரீஃபில் மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கை வியட்நாம் உள்ளிட்ட அண்டை நாடுகளைப் பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
ஆண்டுதோறும் சர்வதேச கடல்வழி வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு நடைபெறும் இப்பகுதியைத் தனது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரச் சீனா முயல்வது, ஆசியப் பிராந்தியத்தில் ஒரு புதிய போருக்கு வித்திடுமோ என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.
