தென் சீனக் கடலில் உள்ள சர்ச்சைக்குரிய பாரசெல் (Paracel) தீவுகளில் சீனா மேற்கொண்டு வரும் பிரம்மாண்ட நில மீட்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு வியட்நாம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பெய்ஜிங் அதனைத் தற்போது நியாயப்படுத்தியுள்ளது.
“ஷிஷா தீவுகள் (பாரசெல் தீவுகளின் சீனப் பெயர்) சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி; இதில் எந்தச் சர்ச்சையும் இல்லை” என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். அங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், உள்ளூர் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தவுமே இந்த “அவசியமான” கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாகச் சீனா விளக்கமளித்துள்ளது.
குறிப்பாக, ஆன்டிலோப் ரீஃப் (Antelope Reef) பகுதியில் சுமார் 1,490 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாகச் செயற்கைக்கோள் படங்கள் ஆதாரத்துடன் வெளியாகியுள்ள நிலையில், சீனாவின் இந்த வாதம் சர்வதேச அளவில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஏற்கனவே பாரசெல் தீவுகள் மீது தங்களுக்குத்தான் வரலாற்று ரீதியான உரிமை இருப்பதாகக் கூறும் வியட்நாம், சீனாவின் இந்த நடவடிக்கையைச் “சட்டவிரோதமானது” எனச் சாடியுள்ளது. வாஷிங்டனைச் சேர்ந்த வியூக ஆய்வுகளுக்கான மையம் (CSIS), சீனாவின் தற்போதைய கட்டுமான வேகம் தொடர்ந்தால், இது தென் சீனக் கடலிலேயே சீனாவின் மிகப்பெரிய செயற்கைத் தீவான ‘மிஸ்சீஃப் ரீஃப்’-ஐ விஞ்சிவிடும் என எச்சரித்துள்ளது.
தூர்வாரும் பணிகள் மூலம் உருவாக்கப்படும் இந்த நிலப்பரப்பில், சீனா தனது ஏவுகணை மற்றும் ரேடார் அமைப்புகளை நிறுவி, இப்பகுதியை ஒரு மிகப்பெரிய ராணுவக் கோட்டையாக மாற்றத் திட்டமிட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. சீனாவின் இந்த அத்துமீறல் ஆசியப் பிராந்தியத்தில் ஏற்கனவே பதற்றத்தில் உள்ள வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற அண்டை நாடுகளைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
