மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் மிக முக்கிய ராணுவ அமைப்பான இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) கடற்படைத் தளபதி அலிரெஸா டங்சிரி இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக வெளியாகி உள்ள தகவல் உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.

கடந்த 20 நாட்களாக உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியான ஹோர்முஸ் ஜலசந்தியைத் தனது இரும்புப்பிடிக்குள் வைத்திருந்த டங்சிரி, பந்தர் அப்பாஸ் பகுதியில் நடத்தப்பட்ட துல்லியமான வான்வழித் தாக்குதலில் உயிரிழந்ததாக இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

2018 முதல் ஈரானியக் கடற்படையை வழிநடத்தி வந்த இவர், மறைந்த தளபதி காசெம் சுலைமானிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதன் மூலம் உலகப் பொருளாதாரத்தையே ஆட்டிப்படைத்த ‘மாஸ்டர் மைண்ட்’ டங்சிரி கொல்லப்பட்டிருப்பது, ஈரானுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகப் பார்க்கப்படும் அதேவேளையில், இனி அந்த கடல்வழிப் பாதை முழுமையாகத் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.