ஈரான் நாட்டின் மிக முக்கியமான ராணுவ அமைப்பான இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) கடற்படைத் தளபதி அலிரேசா டாங்சிரி, அமெரிக்க – இஸ்ரேல் நடத்திய அதிரடித் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் கடலோரப் பகுதியான பண்டார் அப்பாஸில் நடந்த இந்தத் தாக்குதல், கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் போரில் மிக முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகிறது.

உலக நாடுகளுக்குத் தேவையான 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு கொண்டு செல்லப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மூடி, சர்வதேசப் போக்குவரத்தை முடக்கியதில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு என்பதால், இந்தச் சம்பவம் உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

​ஏற்கனவே ஈரானின் உச்ச தலைவர் உள்ளிட்ட முக்கியத் தளபதிகள் கொல்லப்பட்டுள்ள நிலையில், தற்போது டாங்சிரியின் இழப்பு அந்த நாட்டுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் செல்வதைக் குறைத்து, சீனா உள்ளிட்ட நாடுகளிடம் ‘சுங்கக் கட்டணம்’ வசூலிக்கும் முறையை ஈரான் அமல்படுத்தி வந்த நிலையில், இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளதுடன், கச்சா எண்ணெய் விலையில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.