புதுச்சேரி காவல் துறையில் உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றும் ஜான் கென்னடிக்கு எதிராக பெண் ஒருவர் பரபரப்பான புகாரை டிஜிபி ஷாலினி சிங்கிடம் தாக்கல் செய்துள்ளார். `தன்னைத் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 15 ஆண்டுகளாக குடும்ப வாழ்க்கை நடத்தி வந்ததாகவும், பின்னர் சொத்து, நகை, பணம் ஆகியவற்றை பறித்து வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாகவும் அந்த பெண் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மலர் என்ற அந்த பெண்ணின் கூற்றுப்படி, 2010ஆம் ஆண்டு போக்குவரத்து காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த கென்னடி, வழக்குப் பிரச்னை ஒன்றில் உதவுவதாக கூறி அவருடன் நெருக்கமான உறவு ஏற்படுத்தியுள்ளார். இதனை அறிந்த பெண்ணின் கணவர் ரமேஷ் அவரை விட்டு பிரிந்து சென்றார்.

இதனை தொடர்ந்து தாலி கட்டி வீட்டில் வைத்து குடும்பம் நடத்தியதாகவும், உடல்ரீதியாக தன்னை பயன்படுத்தி 15 பவுன் நகை, சொத்து பத்திரங்கள், பணம் ஆகியவற்றை பெற்றுக்கொண்டதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.

மேலும், தனது மகளை கென்னடி தவறான நோக்கத்தில் அணுகியதால் மன உளைச்சலுக்குள்ளான 17 வயது மகள் தற்கொலை செய்துக்கொண்டதாகவும்,  இதேபோல், மற்றொரு மகளும் விபத்தில் உயிரிழந்ததாகவும், இருவரின் மரணத்திற்கும் கென்னடியின் மிரட்டல்களே காரணம் என கூறியுள்ளார்.

இதனையடுத்து கென்னடியின் மிரட்டல்களின் ஆடியோ ஆதாரங்கள், அவருடன் எடுத்த புகைப்படங்கள் டிஜிபியிடம் அளிக்கப்பட்டுள்ளது. கென்னடியை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இன்ஸ்பெக்டர் கென்னடி தனது மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். ‘அந்த பெண்ணின் மகன் சிறையில் இருப்பதற்கு உதவிக்கேட்டதை மறுத்ததால் பழிவாங்க இந்த புகார்களை எழுப்புகிறார். புகைப்படங்கள் மர்பிங் செய்யப்பட்டவை’ என கூறியுள்ளார்.

ஆனால், மலர் கூறும்போது, ‘இவரால் என் குடும்பமே அழிந்துவிட்டது. இனி எந்தப் பெண்ணும் இவர் போல ஏமாற கூடாது. என் மகன் மீது தவறான வழக்கு பதிந்து பழிவாங்குகிறார். எனது மகன் மற்றும் எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை’ என கண்கலங்கிய குரலில் மனவேதனையுடன் தெரிவித்தார். இது தொடர்பாக தற்போது டிஜிபி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.