நாகர்கோவிலை அடுத்த தம்மத்துக்கோணம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கையா (62). அவரது மனைவி பாமா (52). இவர்களது மகள் ரம்யா, திருமணமாகிய பின்னர் கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறால், பிரிந்து வந்து கடந்த சில மாதங்களாக பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த பிரிவு அவரது தாயான பாமாவின் மனநிலையை கடுமையாக பாதித்தது.
மகளின் திருமண வாழ்க்கை சரியில்லை என்ற மன வேதனையில் பாமா தொடர்ந்து மனமுடைந்த நிலையில் இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் “கோயிலுக்கு போகிறேன்” என கூறி வீட்டை விட்டு சென்ற பாமா, நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை.
இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். பின்னர், தம்மத்துக்கோணம் மன்னராஜா தெருவில் உள்ள குளத்தில் பாமா விஷம் குடித்து, பின்னர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக பாமாவை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் உறுதி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு, பாமாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
மகளின் திருமண விவகாரம் சரியில்லாமல் முடிந்து, குடும்பம் சீரழிந்து இருப்பதற்கான மன வேதனையிலேயே பாமா தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
