தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்தவர் மொஹிலால். இவரது மனைவி கல்யாணி. இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களது மூத்த மகள் சிந்துவுக்கு பாலாஜி என்ற வாலிபருடன் திருமணம் நடந்தது. ஆகஸ்ட் 17ஆம் தேதி நடந்த திருமண நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
பின்னர் மாலை நேரம் கல்யாணி தனது மகள் சிந்துவை கணவரிடம் ஒப்படைக்கும் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். மகள் தன்னை விட்டு பிரிவதை தாங்க முடியாமல் உணர்ச்சிவசப்பட்டு அழுது கொண்டிருந்த நேரத்தில் திடீரென அவர் மயங்கி விழுந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கல்யாணி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நட த்தி வருகிறார்.
