திருநெல்வேலி மாவட்டம் வீரமநல்லூரைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி முத்துலட்சுமி. இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் முத்துலட்சுமி தனது பிள்ளைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது முத்துலட்சுமி கூறியதாவது, எனது கணவர் முத்துக்குமாரோடு சேர்ந்து கட்டுமான நிறுவனம் நடத்தி வந்தேன். கடந்த 10 மாதமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தற்போது விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளேன். நான் பண மோசடி செய்து விட்டதாக எனது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசாரின் மீது மூன்று வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இப்போது என் கணவரும் அவரது சகோதரரும் சேர்ந்து என்னை மிரட்டுகின்றனர். இதனால் வாழ வழி இல்லாமல் தற்கொலைக்கு முயற்சி செய்தேன். பொய் வழக்குகளில் இருந்து என்னை எப்படியாவது காப்பாற்றி விடுங்கள். நானும் என் குழந்தைகளும் வாழ வழி செய்ய வேண்டும் என அந்த பெண் கூறியுள்ளார்.