திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தட்டாங்குட்டையில் மருத்துவப் படிப்பும் படிக்காமல் கடந்த 8 மாதங்களாக நோயாளிகளுக்கு ஒரு பெண் சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜுவின் உத்தரவின் பேரில் மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மீரா தலைமையில் அதிகாரிகள் கிளினிக் மற்றும் மருந்தகத்தில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர்.

அந்த கிளினிக்கில் சிகிச்சை அளித்து வந்த நிம்மி ஏஜோஸ் (43) என்பவர் தனது பெயருக்கு பின் ‘எம்பிபிஎஸ், எம்.டி.’ என மருந்துச் சீட்டுகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அவரிடம் இருந்து பெறப்பட்ட கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்டவை என உறுதி செய்யப்பட்டதால், பெருமாநல்லூர் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், அவர் இயக்கிய கிளினிக் மற்றும் மருந்தகத்திற்கு அதிகாரிகள் ‘சீல்’ வைக்கும் நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளனர்.