சென்னை மாவட்டம் கொளத்தூர் சேர்ந்தவர் காதர் பாஷா. இவரது மனைவி நிஷா. மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான காதர் பாஷா தினமும் குடித்துவிட்டு தனது மனைவியை அடித்து சித்திரவதை செய்துள்ளார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 9-ஆம் தேதி மதுபோதையில் வீட்டிற்கு வந்த காதர் பாஷா நிஷாவிடம் வழக்கம் போல தகராறு செய்துவிட்டு தூங்கினார்.

இதனால் கடும் கோபத்தில் இருந்த நிஷா தனது கணவருக்கு பாடம் கற்பிப்பதற்காக கொதிக்கும் எண்ணெயை காதர் பாஷாவின் முகத்தில் ஊற்றினார். இதனால் வலியில் அலறி துடித்த காதர் பாஷாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காதர் பாஷா உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நிஷாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.