கிருஷ்ணகிரி மாவட்டம் நார்பனட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோபால்(40). இவர் செல்லமாக ஒரு நாய் வளர்த்து வருகிறார். அதே கிராமத்தில் கௌரம்மா(64) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கௌரம்மாவின் பேரனான முனியேந்திரன்(24) கடந்த சில நாட்களாக தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் கோபால் வளர்த்த நாய் முனியேந்திரனை கடிக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த முனியேந்திரன் கோபாலன் வீட்டிற்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு வீட்டிற்கு வந்தார். சிறிது நேரம் கழித்து கோபாலும் முனியேந்திரன் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி முனியேந்திரன் கத்திரிக்கோலால் கோபாலின் மார்பு பகுதியில் சரமாரியாக குததினார். இதனால் படுகாயமடைந்த கோபாலை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கோபால் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் முனியேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.