கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூரில் நடந்த சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீர்த்தி என்ற விதவை பெண் தனது கணவரை 2022-ஆம் ஆண்டு இழந்த பின், தனது மகளை வளர்க்க தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

அப்போது அம்பிகனஹள்ளி பகுதியில் வசிக்கும் சுனில் (33) என்ற இளைஞன் அவளை காதல் வலையில் சிக்க வைத்து, திருமணம் செய்துகொண்டார். சுனில் தனது மனைவியுடன் திருமணத்தை சிக்கபல்லாபூர் துணைப் பதிவுத் துறையில் சட்டபூர்வமாக பதிவு செய்திருந்தார்.

ஆனால், திருமணத்துக்கு பின் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த கீர்த்தியை, குடும்பத்தின் எதிர்ப்பைக் காரணம் காட்டி சுனில் விட்டு வெளியேறினார். அதிர்ச்சியளிக்கும் வகையில், அவர் பின்னர் மற்றொரு இளம் பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கீர்த்தி, நீதி கேட்டு கணவன் சுனிலின் வீட்டிற்கு சென்றபோது, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 112 காவல்துறை குழு, கர்ப்பிணியான கீர்த்தியை மீட்டு சிக்பல்லாபூர் தாய் மற்றும் குழந்தை மருத்துவமனையில் அனுமதித்தது.

இதேபோல், கீர்த்தியின் மகளையும் சுனில் பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்குமுன், சில ஆண்டுகளுக்கு முன்பு கீர்த்தி சுனிலுக்கு எதிராக சிக்பல்லாபூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அப்போது அவர் தனது மனைவியை நன்றாக கவனித்துக்கொள்வதாக எழுத்து மூலம் உறுதி அளித்தும் கையெழுத்திட்டிருந்தார் என்பது தகவல். கணவனை இழந்த பின் நம்பிக்கையுடன் வாழ்ந்த கீர்த்திக்கு மீண்டும் பெரிய அதிர்ச்சி தந்த இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.