அமெரிக்காவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த சில மணி நேரங்களிலேயே நேரிட்ட கொடூர ஹெலிகாப்டர் விபத்தில், இந்திய வம்சாவளி மணமகன் மற்றும் ஹெலிகாப்டர் பைலட் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைப் பூர்வீகமாகக் கொண்டு பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவின் அட்லாண்டாவுக்குக் குடிபெயர்ந்த பிஜி ஜார்ஜ் – பேபா தம்பதியின் மகன் டேவ் பிஜி (25), டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாகப் பணியாற்றி வந்தார்.

இவருக்கும், ஆலப்புழாவைச் சேர்ந்த நர்ஸ் ஜெஸ்னி என்பவருக்கும் டாவ்சன்வில் பகுதியில் உள்ள ‘தி ரெவெர்’ என்ற இடத்தில் கோலாகலமாகத் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது மகனைப் பெருமையாகப் பேசிய தந்தையின் வார்த்தைகள் அடங்குவதற்குள், புதுமணத் தம்பதியினர் அட்லாண்டா ஹோட்டலுக்குச் செல்லவிருந்த ஹெலிகாப்டர், கடும் பனிமூட்டம் மற்றும் மழை காரணமாக டாவ்சன்வில் தென்மேற்குப் பகுதியில் உள்ள அடர்ந்த காட்டு மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

மோசமான வானிலை காரணமாகப் பயணிக்க டேவ் பிஜி மறுத்தபோதிலும், ஹெலிகாப்டர் பைலட்டின் சமரசத்தால் அவர்கள் பயணத்தைத் தொடர்ந்ததே இந்த விபரீதத்திற்கு வழிவகுத்துள்ளது. கரடுமுரடான மலைப்பகுதி என்பதால் விபத்து நடந்த இடத்தை மீட்புக் குழுவினர் அடைய சுமார் 5 மணி நேரம் ஆனது.

அவர்கள் அங்கு சென்றபோது மணமகன் டேவ் பிஜியும், பைலட்டும் உயிரிழந்தது தெரியவந்தது. மணமகள் ஜெஸ்னி சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக ஹெலிகாப்டர் இடிபாடுகளுக்கு இடையே படுகாயங்களுடன் உயிருக்குக் போராடிக் கொண்டிருந்தார். மயக்கம் தெளிந்து கண் விழித்த ஜெஸ்னி, தனது மார்பில் சாய்ந்திருந்த கணவர் டேவ் பிஜியின் நாடித்துடிப்பைப் பரிசோதித்தபோது, அவரது உயிர் பிரிந்திருப்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்தார்.

நர்சான ஜெஸ்னிக்கு உடலில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் எலும்பு முறிவுகள் எதுவும் ஏற்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் ஜெஸ்னி, திருமணமான சில மணி நேரங்களிலேயே கணவனைப் பறிகொடுத்த சோகத்தில் மீள முடியாமல் தவித்து வருகிறார்.