இங்கிலாந்து கால்பந்து அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் செல்சீ (Chelsea) கிளப் வீரருமான ரஹீம் ஸ்டெர்லிங் (31), போதைப்பொருள் உட்கொண்டு கார் ஓட்டியதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் விளையாட்டு உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று அவர் ஓட்டிச் சென்ற சொகுசு கார் ஒன்று சாலையோரத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து, போலீஸார் அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.

மேலும், இந்த விபத்தின் போது அவர் தடைசெய்யப்பட்ட ‘கிளாஸ் சி’  ரக போதைப்பொருளை வைத்திருந்ததாகவும், மருத்துவப் பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

இதே நேரத்தில், ரஹீம் ஸ்டெர்லிங் ஒரு அதிவேக லம்போர்கினி காரை ஓட்டிச் செல்வது போன்ற ‘ வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், அவர் காரை அங்கிங்குமாகத் தாறுமாறாக ஓட்டியபடியே, பலூனில் இருந்து ஒருவித வாயுவை சுவாசிப்பதுபோன்ற திடுக்கிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அது பிரிட்டனில் தடைசெய்யப்பட்ட, போதை தரக்கூடிய ‘நைட்ரஸ் ஆக்சைடு’ (சிரிப்பூட்டும் வாயு – Laughing Gas) என நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த வீடியோவின் உண்மைத்தன்மை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையிலும், உலகப் புகழ்பெற்ற ஒரு விளையாட்டு வீரர் இப்படி பொறுப்பற்ற முறையில் போதைப்பொருள் பயன்படுத்தி கார் ஓட்டியிருப்பது சாலை பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் ஒழுக்கத்திற்கு எதிரானது எனப் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.