நேபாளத்தைச் சேர்ந்த 14 வயது பள்ளிச் சிறுமியான அஸ்மிதா தமங், தனது 18 மாதக் குழந்தையான தம்பியை கைகளில் ஏந்தியபடி வகுப்பறையில் அமர்ந்து பாடம் கவனிக்கும் உருக்கமான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி ஒட்டுமொத்த உலகையும் நெகிழச் செய்துள்ளது. ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் இந்தச் சிறுமியின் தாய் திடீரென மரணமடைந்ததால், மூன்று உடன்பிறப்புகளைக் கவனித்துக் கொள்ளும் குடும்பப் பொறுப்பு இந்தச் சின்ன வயதிலேயே அஸ்மிதாவின் தோள்களில் விழுந்துள்ளது. தந்தை வேலைக்குச் சென்றுவிடுவதால், வீட்டில் தம்பியைப் பார்த்துக் கொள்ள யாரும் இல்லாத சூழலிலும், தனது கல்வியைக் கைவிட விரும்பாத அந்தச் சிறுமி, தினமும் தனது தம்பியைத் தூக்கிக்கொண்டே பள்ளிக்கு வந்து வகுப்பறையில் அமர்ந்து படித்து வருகிறான்.
View this post on Instagram
வகுப்பறையில் சிறுமியுடன் ஒரு பச்சிளம் குழந்தையும் இருப்பதை தற்செயலாகக் கவனித்த ஆசிரியர், இதுகுறித்து விசாரித்தபோதுதான் இந்த சோகப் பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. படிப்பின் மீது அஸ்மிதா கொண்டுள்ள அர்ப்பணிப்பும், துயரங்களைத் தாங்கும் அவளது மனவலிமையும் சமூக வலைதளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், விளையாடித் திரிய வேண்டிய வயதில் இவ்வளவு பெரிய சுமையைத் தாங்கி நிற்கும் இந்த ஏழைச் சிறுமிக்கு, நேபாள அரசு அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் உரிய நிதியுதவியும் பாதுகாப்பும் வழங்கி, அவள் எவ்விதத் தடையுமின்றி தொடர்ந்து கல்வி கற்க உதவ வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
