கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இரு தரப்பிற்கும் இடையே போர் இன்னும் முடிவின்றித் தொடர்ந்து வருகிறது. இந்த போரை ஈரானின் ‘புரட்சிகர இஸ்லாமிய காவல் படை’  முன்னின்று நடத்தி வரும் சூழலில், போர் முடிவுகள் தொடர்பாக ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியானுக்கும் அந்த ராணுவப் படைக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகக் கூறப்பட்டது.

மேலும், ராணுவப் படைதான் ஈரானை இயக்குவதாகவும், பெசெஸ்கியான் பெயரளவிலேயே அதிபராக இருக்கிறார் என்றும் மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதன் தொடர்ச்சியாக, அதிபர் பெசெஸ்கியான் தனது அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தை நாட்டின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டதாகப் பிரிட்டனின் ‘ஈரான் இன்டர்நேஷனல்’ ஊடகம் செய்தி வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பியது.

ஆனால், இந்த ராஜினாமா செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று ஈரான் அரசு உடனடியாக மறுப்புத் தெரிவித்துள்ளது. இது குறித்து ஈரான் அதிபர் அலுவலகத்தின் துணைத் தலைவர் செய்யது மெஹ்தி தபதபாயி தனது எக்ஸ் தளத்தில், வெளிநாட்டு ஊடகங்கள் பரப்பும் இந்த வதந்திகள் அவர்களின் கற்பனையான ஆசைகளே தவிர வேறில்லை என்று சாடியுள்ளார்.

மேலும், ஈரான் மக்கள் எவ்வாறு தங்கள் ஒற்றுமை மற்றும் எதிர்ப்பின் பாதையிலிருந்து பின்வாங்க மாட்டார்களோ, அதேபோல அதிபர் பெசெஸ்கியானும் மக்களுக்குச் சேவை செய்வதிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார் என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.