அமெரிக்காவில் நண்பர்களின் உயிரைக் காப்பாற்றிவிட்டு இந்திய மாணவர் ஒருவர் வீர மரணமடைந்த சோகமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள அப்துல்லாபூர்மேடு பகுதியைச் சேர்ந்த அனுரூப் ரெட்டி (23) என்ற இளைஞர், தனது மேல்படிப்புக்காக கடந்த 2024-ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று, நார்த் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் முதுநிலை கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை முடித்துள்ளார்.

இந்த நிலையில், அவர் தனது 5 நண்பர்களுடன் டொலிடோ பென்ட் பகுதியிலுள்ள அணைக்கு பொழுதுபோக்கிற்காகச் சென்றுள்ளார். அங்கு நண்பர்களில் 3பேர் எதிர்பாராதவிதமாகத் தவறி தண்ணீருக்குள் விழுந்தபோது, சிறந்த நீச்சல் வீரரான அனுரூப் ரெட்டி சிறிதும் யோசிக்காமல் நீருக்குள் குதித்து, அவர்கள் மூவரையும் ஒருவர் பின் ஒருவராகப் பத்திரமாக மீட்டு கரையேற்றியுள்ளார்.

ஆனால், அனைவரையும் காப்பாற்றிய அனுரூப் ரெட்டி கரையேற முயன்றபோது, நீரில் மூழ்கியிருந்த மீன்பிடி வலையில் அவரது கால் எதிர்பாராதவிதமாகச் சிக்கிக் கொண்டது. அப்போது அணையில் நீரோட்டம் மிகக் கடுமையாக அதிகரித்ததால், வலையிலிருந்து விடுபட முடியாமல் அவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்துத் தகவலறிந்து வந்தமீட்புக் குழுவினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அணையிலிருந்து 20 அடி ஆழத்தில் இருந்து அவரது உடலை மீட்டனர்.

இந்தச் சோகச் சம்பவம் குறித்து ஹூஸ்டனில் உள்ள இந்திய தூதரகம் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, மாணவனின் உடலைத் தாயகம் கொண்டு வருவதற்கான அனைத்து உதவிகளையும் தீவிரமாகச் செய்து வருகிறது.