திருவண்ணாமலை மாவட்டம் மலப்பாம்பாடி பகுதியில் நேற்று நடைபெற்ற திமுக இளைஞரணி வடக்கு மண்டல மாநாட்டில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிர்வாகிகளிடையே உரையாற்றினார். அப்போது அவர், இன்றைய அரசியலில் பல கட்சிகள் மாநாடுகள் நடத்தினாலும், இளைஞர்களை ஒருங்கிணைப்பதே பெரும் சவாலாக மாறியுள்ளதாக கூறினார். ஆனால் திமுகவில் மட்டும் இளைஞரணி நிர்வாகிகளையே மாநாடு அளவிற்கு ஒரே இடத்தில் திரட்ட முடிந்துள்ளதாக குறிப்பிட்டார். இது இந்திய அரசியல் வரலாற்றில் அரிதான நிகழ்வு என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த மாநாடு வெறும் எண்ணிக்கை காட்டும் நிகழ்ச்சியாக இல்லை என்றும், கட்சியின் கொள்கைகளை வலுப்படுத்தவும், அரசியல் சவால்களை எதிர்கொள்ளவும் நடத்தப்பட்ட கூட்டம் என்றும் உதயநிதி ஸ்டாலின் விளக்கினார். திமுக இளைஞரணி என்பது வெறும் கூட்டம் அல்ல; நோக்கமும் திசையும் கொண்ட இயக்கம் என்றார். இளைஞர்கள் அதிகமாக திரண்டால் கட்டுப்பாடு இருக்காது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது என குறிப்பிட்ட அவர், திமுக இளைஞர்கள் அதற்கு முற்றிலும் மாறானவர்கள் என்றும் தெரிவித்தார். ஒழுக்கமும் பொறுப்பும் நிறைந்த இளைஞர்கள் இங்கு திரண்டிருப்பதே அதற்கு சான்று என்றார்.
கட்டுப்பாடு இல்லாத பெரிய கூட்டங்கள் எந்த மாற்றத்தையும் உருவாக்க முடியாது என்றும், இலக்குடன் செயல்படும் இளைஞர்களின் சக்தி தான் அரசியலில் உண்மையான பலம் என்றும் அவர் கூறினார். அந்த வகையில், திமுக இளைஞரணி மாநாடு கட்சியின் எதிர்காலத்திற்கும், தமிழ்நாட்டின் அரசியல் பாதைக்கும் முக்கியமான அடையாளமாக விளங்கும் என அவர் தெரிவித்தார். மற்ற அரசியல் கட்சிகளில் தொண்டர்கள், நிர்வாகிகள், தலைவர்கள் என தனித்தனியாக பார்க்கப்படும் நிலையில், திமுகவில் அனைவரும் “உடன்பிறப்புகள்” என்ற உறவுப்பண்புடன் இணைந்திருப்பதே அதன் தனித்துவம் என்றும், அந்த அரசியல் கலாசாரம் தான் திமுகவை வலிமையாக வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார் .மேலும் கட்டுப்பாடற்ற கூட்டம் என்று தமிழக வெற்றிக் கழகத்தை அவர் மறைமுகமாக விமர்சித்ததாக கூறப்படும் நிலையில் வானவில்லை பார்க்க கூட்டம் வரும் ஆனால் அது மறைந்து விடும் எப்போதுமே உதயசூரியன் மட்டும் தான் நிரந்தரம் என்றும் கூறினார்.
