தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்கனவே 297 வாக்குறுதிகளை அறிவித்திருந்த நிலையில், தற்போது பொதுமக்களை கவரும் வகையிலான மேலும் பல அதிரடி கூடுதல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி பணிக்குச் செல்லும் 10 லட்சம் இளைஞர்களுக்கு, ‘அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின்’ கீழ் புதிய வாகனம் வாங்க ரூ.10,000 மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரிப் படிப்பை முடித்த மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக ஏதுவாக, தாலுகா அளவில் சிறப்பு ஆலோசனையகங்கள் அமைக்கப்படும்.

இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் சிறு, குறு தொழில்கள் தொடங்க விண்ணப்பித்தால், 30 நாட்களுக்குள் ஒற்றைச் சாளர முறையில் உரிமம் வழங்கப்படும். அத்துடன், இதற்கான மானியம் 25 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் 24 மணி நேரமும் இயங்கும் ‘வார் ரூம்’  அமைக்கப்படும்.

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கேபிள் டிவி கட்டணம் 50 சதவீதம் வரை குறைக்கப்படும்.  கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் முந்திரி உடைக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு விலையில்லா சிறிய கை கருவிகள் வழங்கப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பாரம்பரிய ‘அத்துக்கட்டு’ பண்டிகையைத் தொடர்ந்து நடத்த அரசாணை பிறப்பிக்கப்படும் என்றும், மாம்பழத்திற்கு உரிய ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. கட்டடத் தொழிலாளர்கள் பணியின் போது உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்திற்கு ரூ.25 லட்சமும், பனைத் தொழிலாளர்கள் தவறி விழுந்து உயிரிழக்க நேரிட்டால் ரூ.20 லட்சமும் இழப்பீடாக வழங்க அதிமுக வாக்குறுதி அளித்துள்ளது.

மேலும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக வெளியிட்டுள்ள இந்த கூடுதல் வாக்குறுதிகள் பல்வேறு தரப்பு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.