அந்தமான் நிக்கோபார் தீவுகளின் புகழ்பெற்ற ராதாநகர் கடற்கரையில் (ஸ்வராஜ் தீவு), கடலுக்கடியில் உலகின் மிகப்பெரிய இந்திய தேசியக் கொடியை விரித்து அந்தமான் நிர்வாகம் புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது. சுமார் 60 மீட்டர் நீளமும், 40 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பிரம்மாண்ட மூவர்ணக் கொடி, கடலுக்கடியில் குறிப்பிட்ட ஆழத்தில் வெற்றிகரமாக விரித்து வைக்கப்பட்டது. நாட்டின் ஒருமைப்பாட்டையும், கடல்சார் வலிமையையும் பறைசாற்றும் விதமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்த சவாலான பணியில் அந்தமான் நிக்கோபார் காவல்துறை, வனத்துறை, இந்திய கடற்படை, கடலோர காவல்படை மற்றும் பல்வேறு தனியார் டைவிங் மையங்களைச் சேர்ந்த சுமார் 200 ஸ்கூபா டைவர்ஸ் (Scuba Divers) ஒருங்கிணைந்து செயல்பட்டனர். இவர்களின் கூட்டு முயற்சியால் இந்த சாதனை சாத்தியமானது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு அந்தமான் நிக்கோபார் துணைநிலை ஆளுநர் டி.கே. ஜோஷி, தலைமைச் செயலாளர் சந்திர பூஷன் குமார் மற்றும் டிஜிபி எச்.எஸ். தலிவால் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கின்னஸ் உலக சாதனை அமைப்பின் நடுவர் ரிஷிநாத், இந்தச் சாதனையை முறைப்படி அங்கீகரித்து அதற்கான சான்றிதழை அதிகாரிகளிடம் வழங்கினார். மேலும் கடல்சார் சுற்றுலாவுக்குப் பெயர்பெற்ற அந்தமானில் படைக்கப்பட்டுள்ள இந்த சாதனை, இந்திய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.