ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி (URI) பகுதியில் பெய்த கனமழை காரணமாகப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலையின் ஒரு பெரும் பகுதி சரிந்து விழுந்ததில் அந்த வழியாகச் சென்ற தேசிய நெடுஞ்சாலை மணல் மற்றும் பாறைகளால் முழுவதுமாக மூடப்பட்டது.

இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து அடியோடு முடங்கியதுடன், பல வாகனங்கள் சாலையிலேயே சிக்கிக்கொண்டன. நெடுஞ்சாலையே அடையாளம் தெரியாத அளவுக்கு நிலச்சரிவு ஏற்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

உடனடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள், மாற்றுப்பாதை மூலம் போக்குவரத்தைச் சீர் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு போர்க்கால அடிப்படையில் சாலைகளைச் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நிலைமை சீராகும் வரை பொதுமக்கள் அந்தப் பகுதிக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.