ஈரான் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான காலக்கெடுவை அமெரிக்கா மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக, உலக சந்தையில் எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்க, ரஷிய எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்கக் கருவூலத் துறை தற்காலிகமாகத் தளர்த்தி வருகிறது.

ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க மாட்டோம் என்று அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்திருந்த நாடுகளுக்கு, கடந்த மாதம் 30 நாட்கள் சலுகை வழங்கப்பட்டது. அந்தச் சலுகை ஏப்ரல் 11-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தற்போது ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் நீடிப்பதால், மேலும் 30 நாட்கள் அவகாசத்தை அமெரிக்கா வழங்கியுள்ளது.

இதன்படி, வரும் மே 16-ஆம் தேதி வரை ரஷிய கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, ரஷியாவிலிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கும் இந்தியாவிற்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. அமெரிக்கா வழங்கியுள்ள இந்த நீட்டிப்பில் ஒரு முக்கிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இது புதிய கொள்முதலுக்குப் பொருந்தாது. ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்டு, தற்போது கடல் மார்க்கமாகப் பயணித்துக் கொண்டிருக்கும் (In-transit) கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய மட்டுமே இந்த 30 நாட்கள் அவகாசம் பொருந்தும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அமெரிக்கா தடை நீக்கம் செய்திருந்த முதல் 30 நாட்களில், இந்தியா தனது வழக்கமான அளவை விட 3 மடங்கு அதிக கச்சா எண்ணெய்யை ரஷியாவிடமிருந்து இறக்குமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் இந்தத் தடை நீக்கம் அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தாலும், இந்தியாவின் உள்நாட்டு எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்ய இது மிக அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.