அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை ‘முட்டாள்’ என நேரடியாக விமர்சித்து தென்னாப்பிரிக்காவில் உள்ள ஈரான் தூதரகம் பதிவிட்டுள்ள கருத்து, சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) கடற்படைத் தொடர்பு தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அதில் ஈரானிய அதிகாரி ஒருவர் ‘முட்டாள்’ (Idiot) என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தார். இது ஈரானிய வெளியுறவு அமைச்சரைக் குறிப்பதாக அமெரிக்கத் தரப்பில் சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்பப்பட்டன.
You idiot, he meant your Idiot President, Trump.
Just google ‘idiot’—you’ll understand who it is.😎 https://t.co/ukaYXj0FSE
— Iran Embassy SA (@IraninSA) April 18, 2026
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரான் தூதரகம், “அவர் ஈரானிய அமைச்சரைக் குறிப்பிடவில்லை; உங்கள் ‘முட்டாள்’ அதிபர் ட்ரம்பைத்தான் குறிப்பிட்டார். கூகுளில் சென்று இடியட் எனத் தேடிப் பாருங்கள், அது யாரைக் குறிக்கிறது என்பது உங்களுக்கே புரியும்” என எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் கடற்படை விடுத்துள்ள செய்தியில், “ஹார்முஸ் ஜலசந்தி இப்போதும் மூடப்பட்டுள்ளது. எங்கள் தலைவர் இமாம் காமேனியின் உத்தரவுப்படிதான் இது திறக்கப்படுமே தவிர, ஏதோ ஒரு ‘முட்டாளரின்’ ட்வீட்களைப் பார்த்து அல்ல” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரானின் எதிரி நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்கள் இந்த வழியாகச் சென்றால் அவை இலக்கு வைக்கப்படும் என்றும், ஜலசந்தியைப் பயன்படுத்த ஈரானிய கடற்படையிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்காவின் துறைமுகப் பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும் வரை ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக மூடப்பட்டிருக்கும் என ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. முன்னதாக வணிகக் கப்பல்களுக்காகச் சிறிய கால இடைவெளியில் ஜலசந்தி திறக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது பாதுகாப்பான பாதைகள் உட்பட அனைத்தும் மூடப்பட்டு, ஜலசந்தி ஈரானியப் படைகளின் “தீவிரக் கட்டுப்பாட்டிற்குள்” கொண்டு வரப்பட்டுள்ளது.
எல்லைகளில் போர் மேகங்கள் சூழ்ந்திருந்தாலும், மறுபுறம் அமைதிக்கான தூதரகப் பேச்சுவார்த்தைகள் மறைமுகமாக நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 22-ஆம் தேதி போர் நிறுத்தக் கெடுவிற்கு முன்னதாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், பிராந்தியத்தில் நிரந்தர அமைதி ஏற்படும் வரை ஹார்முஸ் ஜலசந்தியின் முழு அதிகாரம், போக்குவரத்துச் சான்றிதழ் வழங்குதல் மற்றும் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் உரிமை ஆகியவை ஈரானிடமே இருக்கும் எனத் தெஹ்ரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
