அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை கட்சி இணைப்பு சாத்தியமில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்த நிலையில், இதற்கு எடப்பாடி பழனிசாமி விரைவில் பதில் அளிப்பார் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை மெரினாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து குறித்து எழுந்த கேள்விக்கு, “இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியே தக்க நேரத்தில் பதில் அளிப்பார்” என தெரிவித்தார். எங்களைக் குறித்து கடுமையான விமர்சனங்கள் இல்லாததால் அவர்களை விமர்சிக்க முடியாது எனவும் கூட்டணியில் இணைப்பது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியை முடிவு செய்வார் என்றும் கூறினார்.
மேலும், டி.டி.வி. தினகரனை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ப்பது தொடர்பான முடிவை, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியே எடுப்பார் என்றும் அவர் கூறினார்.
கட்சி குறித்த விமர்சனம்
அ.தி.மு.க. குறித்து பேசிய ஜெயக்குமார், “அ.தி.மு.க. என்பது பூமாலை அல்ல; அது ஒரு கோபுரம். அதிலிருந்து உதிர்ந்த ஒரு செங்கல்தான் வைத்திலிங்கம்” என விமர்சனமாக தெரிவித்தார்.
மேலும், 100 நாள் வேலைத் திட்டம் குறித்து அவர் கூறுகையில், “மகாத்மா காந்தி பெயரை அந்த திட்டத்திலிருந்து மாற்றக்கூடாது என்பதுதான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு. இந்த திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருந்த நிலையில் தொடரப்பட்டால், அது பொதுமக்களுக்கு நல்லதுதான்” என்றார். மேலும் இவ்வாறு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
