அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்.டி.ஏ (NDA) கூட்டணியில் இணைவது குறித்த கேள்விக்கு, “டிடிவி தினகரன் சொன்னதுதான் இதற்கு பதில்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சுருக்கமாகப் பதிலளித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். இதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வமும் (OPS) அந்தக் கூட்டணியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகாமல் இழுபறி நீடித்து வருகிறது.

இது தொடர்பாக முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “தமிழகத்தில் மீண்டும் ‘அம்மா’ ஆட்சி அமைய வேண்டும் என்பதே எங்களது இலக்கு. அந்த இலட்சியம் வெற்றி பெற வேண்டுமானால், ஓ.பன்னீர்செல்வம் என்.டி.ஏ கூட்டணியில் இணைவதே அவருக்கும் நல்லது, கட்சிக்கும் நல்லது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம், ஓபிஎஸ் இன்னும் ஏன் கூட்டணியில் இணையவில்லை என்பது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “அவர் (ஓபிஎஸ்) ஏன் இன்னும் இணையவில்லை என்பதற்கு டிடிவி தினகரன் ஏற்கனவே ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். அதுதான் இதற்கான பதில். அதைத் தாண்டிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை” எனத் தெரிவித்தார்.

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற இரு தலைவர்களும் பாஜக கூட்டணியில் ஒன்றிணைவார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவும் சூழலில், திண்டுக்கல் சீனிவாசனின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.