மகளிர் உரிமைத் தொகை போன்ற நலத்திட்டங்கள் மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு ‘மூடநம்பிக்கை’ என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தரவுத் தொடர்புத் துறைத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ‘எக்ஸ்’ (X) வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“மகளிர் உரிமைத் தொகை என்பது ஒரு மிகச்சிறந்த நலத்திட்டம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதனைச் செயல்படுத்திய விதமும் பாராட்டத்தக்கது. ஆனால், இத்தகைய திட்டங்கள் மட்டுமே தேர்தலில் வெற்றியைத் தேடித்தந்துவிடும் என்று நம்புவது ஒரு அரசியல் மூடநம்பிக்கையாகும்.

கடந்த 3 ஆண்டுகளில் நிலவிய தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்தால் உண்மை புரியும். தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற மிகப்பெரிய நிதி உதவித் திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநில அரசுகளில், 4 மாநிலங்கள் மட்டுமே மீண்டும் ஆட்சியைப் பிடித்தன; மீதமுள்ள 5 மாநிலங்களில் ஆளும் கட்சிகள் தோல்வியைத் தழுவின” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் பெரும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் தேசிய அளவிலான முக்கிய நிர்வாகியின் இந்தப் பதிவு அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. வெறும் நலத்திட்டங்கள் மட்டுமே வாக்குகளைத் தீர்மானிப்பதில்லை என்பதையே தனது புள்ளிவிவரங்கள் மூலம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் காங்கிரஸ் கட்சி மற்றும் திமுக இடையே சமீப காலமாக மோதல் போக்கு நிலவு வரும் நிலையில் ஆட்சி அதிகார பங்கு தொடர்பாக சிக்கல் நீடிக்கிறது. இந்த நிலையில் பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்து மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.