தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளில் பிப்ரவரி 5 முதல் தினசரி விசாரணை நடத்தப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான வழக்குகளில் முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சர்கள் மீதான 6 வழக்குகள் எடுக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பா வளர்மதி, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ் ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குகள் எடுக்கப்பட்டது.

கீழமை நீதிமன்றங்களில் பிறப்பித்த உத்தரவுகள் சரியானதாக தெரியவில்லை. எனவே அந்த உத்தரவை எதிர்த்து  லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யாத நிலையில், அந்த உத்தரவுகளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுப்பதாக   கடந்த ஆகஸ்ட் மாதம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்தார். எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க கூடிய அந்த சுழற்சி முறை அடிப்படையில் ஆகஸ்டில் இந்த 6 வழக்குகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை, தமிழக அரசு மற்றும் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து சிலர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போது, நீதிமன்றம் எடுத்தது சரியான நடைமுறைதான், அதில் தலையிட முடியாது, வழக்குகளை சந்தியுங்கள் என அறிவுறுத்தல் வழங்கி தள்ளுபடி செய்திருந்தது. அதன்படி நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்த போது ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நீதிபதி ஜெயச்சந்திரனிடமிருந்து  மீண்டும் சுழற்சி முறை அடிப்படையில்,நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்குகள் அனைத்தையும் இறுதி விசாரணைக்கு பட்டியலிடுவது தொடர்பாக இன்று நாள் குறிக்கப்படும் என்று நீதிபதி பட்டியலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து சுழற்சி முறையில்  பிப்ரவரி 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தினசரி பிற்பகல் 3 மணிக்கு விசாரணை நடைபெறும் என்றும், அமைச்சர் ஐ பெரியசாமிக்கு எதிரான வழக்குகள் பிப்ரவரி 12 மற்றும் 13ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்றும், முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் பிப்ரவரி 19முதல் 22 வரை விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.

இந்த விசாரணைக்கு  அணைத்து தரப்பும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், இது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம் எடுத்த வழக்கு தொடர்பாக தங்கள் தரப்பு விளக்கங்களை பதில் மனுவாகவோ, அல்லது எழுத்து பூர்வ வாதங்களாகவோ தாக்கல் செய்யலாம். அவ்வாறு தாக்கல் செய்யப்படும் ஆவணங்களை ஜனவரி 30 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். திட்டமிட்டபடி பிப்ரவரி 5ஆம் தேதி விசாரணை தொடங்கும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளின் வழக்குகளால் பிற வழக்குகள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் தற்போது அதற்கும் நீதிபதி  தீர்வை கூறியுள்ளார். அமைச்சர் மீதான ஒரு வழக்கு எடுக்கப்பட்டால் அனைத்து வாதங்களும் கேட்கப்பட்டு குற்றச்சாட்டப்பட்ட நபர்கள் வாதங்கள் கேட்கப்பட்டு ஒருநாள் முழுவதும் வீணாவதை கருத்தில் கொள்வதாகவும்,  தவிர்க்கும் நோக்கத்தில் இந்த வழக்குகளை தினசரி அடிப்படையில் ஒரே நாளில் குறிப்பிட்ட வழக்குகள் இல்லாமல்  பிற்பகலில் மட்டும் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்றும், 3 மணிக்கு தொடங்கி 5:00 மணி வரை விசாரிக்கப்படும் என்றும், அதற்கு தகுந்த வாதங்களை முன்வைக்க வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தல் வழங்கி உள்ளார். எனவே  அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை பிப்ரவரி 5ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 22 ஆம் தேதி வரை பட்டியலிடப்பட்டுள்ளது.

அதாவது அரசியல்வாதிகளின் வழக்குகளால் பிற வழக்குகள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் 3:00 மணிக்கு விசாரணை தொடங்கப்படும். அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வளர்மதி, ஐ. பெரியசாமி, மீதான வழக்கில் விசாரணை நடத்தப்படுகிறது. கடைசியாக பொன்முடி மீதான வழக்கில் விசாரணை நடத்தப்படுகிறது..