உலகளாவிய எரிபொருள் நெருக்கடி மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பை பாதுகாக்கும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடியின் சிக்கன நடவடிக்கைகளை ஏற்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

லக்னோவில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் பேசிய அவர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வாகன அணிவகுப்புகளை உடனடியாக 50 சதவீதம் குறைக்க உத்தரவிட்டுள்ளார். அரசின் உயர் அதிகாரிகளும் தாங்களாகவே முன்வந்து அரசு வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்கத் தொடங்கியுள்ளனர்.

எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதுடன், தேவையற்ற தங்கக் கொள்முதலைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், எரிபொருள் சிக்கனத்திற்காக ‘வீட்டிலிருந்து வேலை’ செய்யும் கலாச்சாரத்திற்கு நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலால் எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில், அரசு செலவினங்களைக் குறைக்கவும் பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் விரிவான திட்டங்களை வகுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார்.