ஐதராபாத்தில் உள்ள மத்திய சிறைச்சாலை, பொதுமக்கள் சிறை வாழ்க்கையை நேரடியாக அனுபவிக்கும் வகையில் ‘சிறையை உணருங்கள்’ என்ற அதிரடித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சாதாரண குடிமக்கள் 12 அல்லது 24 மணி நேரம் கைதிகளைப் போலவே சிறை அறையில் தங்கி, அங்கேயே உணவு உண்டு, கைதிகளின் அன்றாட நடைமுறைகளைப் பின்பற்றலாம்.
சுதந்திரத்தின் மதிப்பைப் பொதுமக்கள் உணர வேண்டும் என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த அனுபவத்திற்கு, 12 மணி நேரத்திற்கு ரூ.1,000 மற்றும் 24 மணி நேரத்திற்கு ரூ.2,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் நிஜாம் காலம் முதல் இன்று வரையிலான சிறை மாற்றங்களை விளக்கும் பிரம்மாண்ட சிறை அருங்காட்சியகம் ஒன்றையும் தெலங்கானா ஆளுநர் சிவ பிரதாப் சுக்லா திறந்து வைத்தார். இதில் புகழ்பெற்ற கைதிகளின் கதைகள் மற்றும் நாகார்ஜுன சாகர் அணை கட்டியதில் கைதிகளின் பங்களிப்பு போன்ற அரிய தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தானாக முன்வந்து கைதியாக வாழும் இந்த வினோத யோசனை தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருவதுடன், பலரையும் இந்த ‘சிறை அனுபவத்தை’ பெறத் தூண்டியுள்ளது.
