கேரளாவில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) வரலாறு காணாத வெற்றியைப் பதிவு செய்தது. மொத்தம் உள்ள 140 இடங்களில் 102 இடங்களை காங்கிரஸ் கூட்டணி தட்டிப்பறித்தது. இதன் மூலம், கடந்த முறை ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதைத் தடுத்து, ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது காங்கிரஸ்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 10 நாட்கள் கடந்த நிலையிலும், முதலமைச்சர் யார் என்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் ஆலோசனை நீடித்து வந்தது. அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் வி.டி. சதீசன் ஆகிய இருவரது பெயர்களும் இறுதிப் பட்டியலில் இருந்தன. இதில் மாநில அளவிலான செல்வாக்கு மற்றும் தேர்தல் வெற்றிக்காக உழைத்த வி.டி. சதீசனையே முதலமைச்சராக்க காங்கிரஸ் மேலிடம் தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று பிற்பகல் 1 மணி அளவில் சட்டமன்ற உறுப்பினர்களின் (MLA) கூட்டுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் வி.டி. சதீசன் சட்டமன்றக் கட்சித் தலைவராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார். அதன் பின்னர் அவர் கேரள ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட காலமாக கேரள அரசியலில் செல்வாக்கு மிக்க தலைவராகத் திகழும் வி.டி. சதீசன், தற்போது பதவி விலகும் சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றி வந்தவர். இடதுசாரி அரசுக்கு எதிராகத் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்ததும், தேர்தல் களத்தில் சிறப்பான வியூகங்களை வகுத்ததும் இவருக்கு இந்த உயரிய பதவியைப் பெற்றுத் தந்துள்ளதாகக் கருதப்படுகிறது.