மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஆட்சி அமைப்பது குறித்து வெவ்வேறு விதமாகப் பேசியது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டத்தில் முதலில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று “அதிமுக ஆட்சி” அமையும் என்று உறுதியாகத் தெரிவித்தார். ஆனால், அவருக்குப் பின் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தில் தேர்தலுக்குப் பின் “தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி” அமையும் என்று குறிப்பிட்டார்.

இரு தலைவர்களும் வெவ்வேறு நிலைப்பாட்டில் பேசியது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, பிரதமர் மோடி தனது உரையில் ‘அதிமுக’ என்ற பெயரைக் குறிப்பிடாமல் தவிர்த்தது அக்கட்சி நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பாஜக தரப்பில் நயினார் நாகேந்திரன் போன்றவர்கள் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாகக் கூறி வரும் நிலையில், பிரதமரின் இந்தப் பேச்சு அதனை உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

அதிமுக தனித்து ஆட்சி அமைக்க விரும்புவதும், பாஜக கூட்டணி ஆட்சியை வலியுறுத்துவதும் வெளிப்படையாகத் தெரிவதால், வரும் தேர்தலில் இவர்களுக்கிடையேயான அதிகாரப் பகிர்வு எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.