“உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ‘ஆரக்கிள்’ (Oracle) கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி ஒரே ஒரு மின்னஞ்சல் (Email) மூலம் உலகளவில் 30,000 ஐடி இன்ஜினியர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்து நடுத்தெருவில் நிறுத்திய கொடூரம் ஒட்டுமொத்த டெக் உலகையுமே அதிர வைத்திருந்தது.

வேலை போன அதிர்ச்சியில் பல லட்சம் இளைஞர்கள் ‘இனி நம் எதிர்காலம் என்ன?’ என்று கதிகலங்கி முடங்கிப்போன சூழலில், பாதிக்கப்பட்ட இந்திய வாலிபர் ஒருவர் வெறும் 45 நாட்களில் தனது அசாத்திய உழைப்பால் 3 மெகா ஆஃபர்களைப் பெற்று ஐடி துறையையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

‘ப்ராக்டிகல் ஹாஸ்பிட்டல் 328’ (PracticalHospital328) என்ற ரெட்டிட் பயனர் ஐடி கொண்ட அந்த இன்ஜினியர், வேலை போன அடுத்த கணமே சோர்ந்துவிடாமல் ‘நீட்கோடு’ தளம் மூலம் தினமும் 4 மணி நேரம் கோடிங் பயிற்சியும், சிஸ்டம் டிசைனுக்காக 2 மணி நேரமும் ஒதுக்கித் தன்னைத் தயார்படுத்தியுள்ளார்.

அதுமட்டுமன்றி, கார்ப்பரேட் உலகில் தற்பொழுது டாப் டிமாண்டில் இருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள ‘கிளாட் ஏஐ’ (Claude AI) உதவியுடன் 30 நாட்கள் பிரத்யேக சிலபஸ் உருவாக்கி, சுயமாகப் படித்து 2 புதிய ப்ராஜெக்டுகளையும் வெற்றிகரமாக முடித்துக் காட்டியுள்ளார்.

தன் படிப்போடு நிறுத்தாமல், வேலை தேடும் வேட்டையையும் தீவிரப்படுத்திய அவர் தினமும் 15 நிறுவனங்களில் அப்ளை செய்து, ‘நெவ்க்ரி’ (Naukri.com) போன்ற தளங்களில் தனது ப்ரொஃபைலை தினமும் அப்டேட் செய்து, தான் உடனே வேலையில் சேரத் தயார் என்பதை ரெக்ரூட்டர்களுக்குப் புரிய வைத்துள்ளார்.

மேலும், ‘லிங்க்ட்இன் பிரீமியம்’ வசதியைப் பயன்படுத்தி 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் மேலாளர்களைத் தன் பக்கம் ஈர்த்த அவர், மே மாத தொடக்கத்தில் 7  இன்டர்வியூக்களை எதிர்கொண்டு, தற்பொழுது 3 பெரிய நிறுவனங்களின் வேலை வாய்ப்பு ஆஃபர்களைத் தன் கையில் வைத்துள்ளார்.

இதில் ஒட்டுமொத்த ஐடி உலகமே வியக்கும் வண்ணம், மிக அதிவேகமாக வளர்ந்து வரும் ‘ஏஐ இன்ஜினியர்’ (AI Engineer) பதவியைத் தேர்ந்தெடுத்துள்ள அந்த இளைஞர், ‘வேலை போயிடுச்சுன்னு கவலைப்படாதீங்க மக்களே, தொடர்ந்து அப்ளை பண்ணிக்கிட்டே இருங்க, நல்லது கண்டிப்பா நடக்கும்’ என நெஞ்சை உருக்கும் வகையில் தந்துள்ள சக்சஸ் ஃபார்முலா, லே-ஆஃப் (Layoff) பயத்தில் இருக்கும் லட்சக்கணக்கான ஐடி ஊழியர்களுக்கு தற்பொழுது ஒரு மாஸ் ஊக்கமருந்தாக மாறியுள்ளது.”