இந்திய மகளிர் அணி விளையாட்டுத் துறையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், ஒரே மாதத்தில் மூன்று உலகக்கோப்பைகளை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் நடைபெற்ற 11 அணிகள் பங்கேற்ற உலகக் கோப்பை மகளிர் கபடிப் போட்டியில், லீக் மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் தாய்லாந்து, வங்கதேசம், ஜெர்மனி, உகாண்டா மற்றும் ஈரானை வீழ்த்திய இந்திய அணி, நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சீன தைபே அணியை 35-28 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது.

இந்தக் கபடி உலகக்கோப்பையுடன் சேர்த்து, இந்திய மகளிர் அணி இந்த மாதத்தில் மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை வென்றுள்ளது. முன்னதாக, நவம்பர் 2-ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற 2025 மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

அதைத்தொடர்ந்து, நவம்பர் 23-ஆம் தேதி கொழும்புவில் நடைபெற்ற பார்வையற்ற பெண்களுக்கான T20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியிலும் நேபாள அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது. இந்தத் தொடர்ச்சியான மூன்று வெற்றிகளுக்காகப் பிரதமர் மோடி உட்படப் பலரும் இந்திய மகளிர் அணிக்குப் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

