உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பவர், தனது இரண்டு மனைவிகளுக்கிடையிலான குடும்பப் பிரச்சினைகள் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் மனமுடைந்து, தான் இறந்துவிட்டதாக நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனோஜ் முதலில் ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்த நிலையில், பின்னர் 2019-ஆம் ஆண்டு ஒரு ஆசிரியையை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் தனது இரண்டு திருமண விவகாரமும் தங்களுக்குத் தெரியாமல் இருந்த நிலையில், இரண்டாவது மனைவியிடமிருந்து விடுபட நினைத்த மனோஜ், கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி நைனிடால் செல்வதாகக் கூறிவிட்டு மாயமானார். அவரது ஸ்கூட்டர் பான்யாலி அருகே ஒரு பள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டதால், அவர் விபத்தில் சிக்கியிருக்கலாம் அல்லது வனவிலங்குகள் தாக்கியிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர்.
இருப்பினும், போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில், 19 நாட்களுக்குப் பிறகு டெல்லியில் அவர் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. செல்போன் சிக்னலை வைத்து அவர் டெல்லி பிஜ்வாசன் பகுதியில் பதுங்கியிருந்ததை உறுதி செய்த போலீஸார், அவரைப் பத்திரமாக மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
இந்த விசாரணையில், தனது குடும்பச் சிக்கல்களில் இருந்து தப்பிக்கவே அவர் தனது மரணத்தைப் போலியாகச் சித்தரித்தது தெரியவந்தது. தற்போது, தவறான தகவல்களைப் பரப்பி போலீஸாரை அலைக்கழித்ததற்காக அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் திட்டமிட்டு வருகின்றனர்.
