மும்பையில் 17 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த குடும்ப வன்முறை மற்றும் ஜீவனாம்சம் தொடர்பான வழக்கில், பெண்ணின் தற்போதைய கணவர் அளித்த அதிரடி வாக்குமூலத்தால் தீர்ப்பு தலைகீழாக மாறியுள்ளது. 2005-ல் முதல் திருமணம் செய்த அந்தப் பெண், தனது முதல் கணவர் மீது கொடுமை மற்றும் ஏமாற்றுப் புகார்களைக் கூறி 2009-ல் வழக்குத் தொடர்ந்தார்.
இதற்கிடையில், அந்தப் பெண் ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டதை அறிந்த முதல் கணவர் தரப்பு, அவரது இரண்டாவது கணவரையே நீதிமன்றத்தில் சாட்சியாக நிறுத்தியது. தனது மனைவியுடன் சட்டப்படி திருமணம் நடந்ததை அந்த நபர் ஒப்புக்கொண்டதால், வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டது.
இந்த ஆதாரங்களை ஆய்வு செய்த போரிவலி மாஜிஸ்திரேட் நீதிமன்றம், ஒரு பெண் தனது முதல் கணவரிடம் விவாகரத்து பெற்ற பிறகு மறுமணம் செய்து கொண்டால், அவர் முன்னாள் கணவரிடம் ஜீவனாம்சம் கேட்க சட்டப்படி உரிமை இல்லை என்று தீர்ப்பளித்தது.
மேலும் அந்தப் பெண் மறுமணம் செய்ததை மறைத்து இத்தனை ஆண்டுகளாக வழக்கு நடத்தியது அம்பலமானதால், அவர் தாக்கல் செய்திருந்த அனைத்து மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஒரு கணவரின் வாக்குமூலமே தனது மனைவிக்கு எதிராக அமைந்து, 17 கால வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்தது மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
