கேரள மாநிலம் திருப்பூணித்துறாவில் உள்ள ஸ்டாச்சு சந்திப்பில், தனியார் பேருந்து ஒன்றின் அடியில் சிக்கி ஒரு பெண் விபத்துக்குள்ளானார். அங்கிருந்தவர்கள் உடனடியாக விரைந்து வந்து அந்தப் பெண்ணை மீட்டு காப்பாற்றினர்.
இருப்பினும், பேருந்துக்கு அடியில் சில மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதால், அந்தப் பெண்ணின் ஆடைகள் முற்றிலும் கிழிந்து சேதமடைந்தன. காயம் மற்றும் அதிர்ச்சியால் அவரால் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை. அந்த இக்கட்டான சூழ்நிலையில், அங்கு சைக்கிளில் தேநீர் விற்றுக்கொண்டிருந்த எம். ஆர். ஷாஜி என்ற நபர் எவ்வித தயக்கமும் இன்றி உடனடியாகச் செயல்பட்டார்.
இதனால் அவர் இடுப்பில் பெல்ட் அணிந்திருந்ததால், தான் உடுத்தியிருந்த ‘முண்டு’ என்ற ஆடையை உடனடியாக அவிழ்த்து, காயமடைந்த அந்தப் பெண்ணின் மானத்தைக் காக்க போர்த்திக் கொள்ளக் கொடுத்தார். பின்னர் அவர் அருகில் உள்ள ஒரு கடையில் இருந்து மாற்று வேட்டியை வாங்கி உடுத்திக் கொண்டார்.
மேலும் விபத்தின்போது பலரும் மொபைலில் படம் பிடிக்கத் துடிக்கும் இக்காலத்தில், சமயோசிதமாகவும் மனிதாபிமானத்தோடும் செயல்பட்ட ஷாஜியின் இந்தச் செயல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் பெண்ணின் கண்ணியத்தைக் காத்த இந்த தேநீர் வியாபாரியின் நெகிழ்ச்சியான செயலை ‘உண்மையான மனிதநேயம்’ எனப் பாராட்டி, நாடு முழுவதும் உள்ள மக்கள் அவருக்குத் தங்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் குவித்து வருகின்றனர்.
