மேற்கு நைஜீரியாவின் குவாரா மாநிலத்தில் புகுந்த ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் நடத்திய கோரத் தாக்குதலில், சிறுவர்கள் உட்பட குறைந்தது 162 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். நைஜீரியாவில் சமீப காலங்களில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
அதாவது குவாரா மாநிலத்தின் நைஜீரியா-பெனின் எல்லைக்கு அருகிலுள்ள வோரோ மற்றும் நுகு ஆகிய இரண்டு கிராமங்களை இலக்கு வைத்து, கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ‘லகுராவா’ எனப்படும் இஸ்லாமிய அரசு (ISIS) அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதக் குழுவினர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் முகமது உமர் பயோ தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடந்த கிராமங்களில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல்கள் சிதறிக் கிடப்பதாகவும், ஏராளமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட கிராமங்கள் தலைநகரிலிருந்து சுமார் 8 மணி நேர பயணத் தொலைவில் இருப்பதால், செஞ்சிலுவைச் சங்கக் குழுவினர் அங்கு செல்வதில் சிக்கல் நீடிக்கிறது.
நைஜீரிய ராணுவம் மேற்கொண்டு வரும் தீவிர தேடுதல் வேட்டைக்கு பயந்து, பயங்கரவாதிகள் விரக்தியில் இத்தகைய கோழைத்தனமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக மாநில ஆளுநர் அப்துல்ரஹ்மான் அப்துல்ரசாக் கண்டனம் தெரிவித்துள்ளார். நைஜீரியாவில் நிலவும் இந்த பாதுகாப்பு நெருக்கடியை மதிப்பிடுவதற்காக அமெரிக்கா தனது சிறிய ராணுவ அதிகாரிக் குழுவை அங்கு அனுப்பியுள்ளது. ஏற்கனவே கடந்த டிசம்பரில், இஸ்லாமிய அரசுடன் தொடர்புடைய கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் தனித்தொரு சம்பவமாக, கட்சினா மாநிலத்தின் டோமா கிராமத்திலும் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர் கடத்தல்கள் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்களால் நைஜீரியா முழுவதும் தற்போது பதற்றமான சூழல் நிலவுகிறது.
