பிரதமர் நரேந்திர மோடியின் எரிபொருள் சேமிப்பு மற்றும் இறக்குமதிச் செலவைக் குறைக்கும் வேண்டுகோளை ஏற்று, ஜோஹோ நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மீண்டும் ‘வீட்டிலிருந்தே வேலை’ செய்யும் முறையை வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறது. சமீபத்திய மாதங்களில் தனது ஊழியர்களை முழுமையாக அலுவலகத்திற்கு வரவழைத்திருந்த ஜோஹோ, தற்போது நாட்டின் நலன் கருதி இந்த முடிவை மறுஆய்வு செய்ய உள்ளதாக அதன் தலைமைச் செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
மேலும் எரிபொருள் நுகர்வைக் குறைப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிக்க வேண்டும் என்ற பிரதமரின் ‘தேசமே முதன்மை’ என்ற அழைப்பிற்குத் தாங்கள் மதிப்பளிப்பதாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஜோஹோ நிறுவனம் தனது பண்ணைகளில் இயற்கை விவசாய முறைகளைக் கையாளுவதோடு, டீசல் பயன்பாட்டைக் குறைப்பதற்கான வழிகளையும் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டுள்ளார்.
இதனால் வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறை மீண்டும் அமலுக்கு வந்தால், அலுவலகங்களைச் சுற்றியுள்ள சிறு வணிகங்கள் மற்றும் கேன்டீன் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்களா என்ற கேள்விக்கு, கடந்த காலங்களிலும் அத்தகைய தொழிலாளர்களுக்கு ஜோஹோ ஆதரவாக இருந்ததை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
