நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்றால் வெளிநாடு செல்ல வேண்டும் அல்லது அங்கு பெரிய நெட்வொர்க் இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை உடைத்து காட்டியுள்ளார் இந்திய மென்பொருள் பொறியாளர் கார்த்திக் மோடி. அமேசான் நிறுவனத்தில் பணியாற்றும் இவர், தனது விடாமுயற்சியால் இந்தியாவிலிருந்தே வெளிநாட்டு நிறுவனத்தில் ரூ.1.8 கோடி சம்பளத்தில் வேலையைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

எந்தவிதமான பரிந்துரையும் இன்றி, தனது அறையில் இருந்தபடியே திட்டமிட்டு செயல்பட்டு இந்த இலக்கை எட்டியதாக அவர் பகிர்ந்துள்ள தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ​தனது வெற்றிக்கான ரகசியமாக கார்த்திக் மோடி 12 வார கால கடுமையான பயிற்சியைக் குறிப்பிடுகிறார். சுமார் 30 சர்வதேச நிறுவனங்களை ஆய்வு செய்து, அவற்றின் தேவைகளுக்கேற்ப தனது ரெஸ்யூம் (Resume) மற்றும் தொழில்நுட்பத் திறன்களை வளர்த்துக் கொண்டுள்ளார்.

குறிப்பாக ‘சிஸ்டம் டிசைன்’ மற்றும் ‘டேட்டா ஸ்டரக்சர்’ ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்திய அவர், 8 முதல் 10 முக்கிய தொழில்நுட்ப முறைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளார். “குறுக்கு வழிகள் எதுவும் இல்லை, முறையான திட்டமிடலும் தொடர்ச்சியான பயிற்சியுமே வெற்றிக்குக் காரணம்” என்று அவர் ஐடி இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டியுள்ளார்.