இந்தியாவிற்குச் சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பயணி ஒருவர், சிறு கடை ஒன்றில் கள்ள நோட்டைக் கொடுத்து இந்திய ரூபாயைச் சில்லறையாகப் பெற்று ஏமாற்றிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், சுமார் 20 யூரோ (Euro) மதிப்புள்ள கள்ள நோட்டைக் கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக 1,960 இந்திய ரூபாயைப் பெற்றுக்கொண்டு அந்த நபர் அங்கிருந்து லாவகமாகச் செல்கிறார்.
தான் கொடுத்தது கள்ள நோட்டு என்று தெரியாமலேயே அவர் செய்தாரா அல்லது திட்டமிட்டு ஏமாற்றினாரா என்பது தெரியாத நிலையில், இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் வைரலாகி வரும் இந்தக் காட்சியைப் பார்த்த பலரும், “இது ஒரு மோசமான டிராவல் ஹேக்” என்றும், “சிறு கடைக்காரர்களை இப்படி ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது” என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வெளிநாட்டுப் பணத்தைப் பெற்றுக்கொண்டு சில்லறை கொடுக்கும்போது, கடைக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும், இத்தகைய வீடியோக்கள் மற்றவர்களையும் தவறான வழியில் தூண்டக்கூடும் என்பதையும் இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
