ஒடிசா மாநிலத்தில், அசுத்தமான தயிர் வடை சாப்பிட்ட 58 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை காலை சாலையோர விற்பனையாளர் ஒருவரிடம் தயிர் வடை வாங்கி சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என பலருக்கும் அடுத்தடுத்து வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதில் துரதிர்ஷ்டவசமாக ஒரு மூதாட்டி உயிரிழந்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களில் 52 பேர் தீவிர சிகிச்சைக்காக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் நலமுடன் இருப்பதாகவும், இது உணவு நஞ்சூட்டல் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுகாதார அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்தனர். இது தொடர்பாக சுகாதார அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளதோடு, உணவு மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
