அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு நிறுத்திவைப்பதாக எடுத்த அதிரடி முடிவு உலக அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் மின் உற்பத்தி மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டிய டிரம்ப், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி திடீரென பின்வாங்கியுள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியான சரியாக 15 நிமிடங்களுக்கு முன்பாக, பங்குச் சந்தை மற்றும் கச்சா எண்ணெய் சந்தையில் சுமார் 12,600 கோடி ரூபாய் மதிப்பிலான ரகசிய வர்த்தகம் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்தை தொடங்குவதற்கு முன்பே நடந்த இந்த அசாத்தியமான வர்த்தகத்தின் மூலம், மர்ம நபர் ஒருவர் வெறும் 20 நிமிடங்களில் சுமார் 840 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளார்.
டிரம்பின் அறிவிப்பு வெளியானதும் அவர் கணித்தபடியே பங்குச் சந்தை 2.5 சதவீதம் உயர்ந்தது, அதே சமயம் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 109 டாலரிலிருந்து 92 டாலராகக் கடுமையாக வீழ்ந்தது. டிரம்பின் சமூக வலைதளப் பதிவிற்கு முன்னதாகவே இவ்வளவு பெரிய தொகையைப் பந்தயம் கட்டிய அந்த மர்ம நபர் யார் என்பது குறித்த விவாதம் சர்வதேச அளவில் எழுந்துள்ளது.
அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே இந்தத் தகவல் கசிந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளதால், இது திட்டமிடப்பட்ட ஒரு முறைகேடா என்ற கோணத்தில் பொருளாதார நிபுணர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தாலும், மறுபுறம் அதன் மூலம் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் நிழல் உலக விளையாட்டும் அரங்கேறி வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
