தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் பெரும் புகைச்சல் கிளம்பியுள்ளது. கடந்த முறை பண்ருட்டி தொகுதியில் வெற்றி பெற்ற தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு, இந்த முறை மீண்டும் ஒரே ஒரு தொகுதியை மட்டுமே ஒதுக்க திமுக முன்வந்துள்ளது.
ஆனால், தங்களுக்குக் குறைந்தது 2 தொகுதிகளாவது வேண்டும் என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் பிடிவாதம் காட்டி வந்தார்.
திமுக இறங்கி வராததால் ஆத்திரமடைந்த வேல்முருகன், இன்று சென்னையில் தனது கட்சியின் உயர்நிலைக் குழு அவசரக் கூட்டத்தைக் கூட்டினார்.
விருகம்பாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனையில், “ஒரு தொகுதியை வாங்கிக் கொண்டு கூட்டணியில் நீடிப்பதை விட, கௌரவமாகத் தனித்துப் போட்டியிடலாம்” எனப் பெரும்பாலான நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இதனால் திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி எந்த நேரத்திலும் வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வேல்முருகனின் இந்த அதிரடி மூவ், திமுக தலைமைக்கு ஒரு தர்மசங்கடமான சூழலை உருவாக்கியுள்ளது.
