தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இடையே சமீபகாலமாகத் தர்மசங்கடமான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில், திருமாவளவன் இன்று விஜய்க்கு ஒரு பகீர் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

“நடிகர் விஜய் அரசியல் அழுத்தங்களுக்குப் பணிந்து போனால், அவர் அரசியலில் வெறும் பூஜ்யமாகிவிடுவார்” என்று அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தவெக-வின் முக்கியப் புள்ளியான ஆதவ் அர்ஜுனா, விசிக-வில் இருந்து வெளியேறி விஜய்யுடன் இணைந்த பிறகு, கூட்டணி மற்றும் ஆட்சி அதிகாரம் குறித்துப் பேசி வருவது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இது குறித்துப் பேசிய திருமாவளவன், “ஆதவ் அர்ஜுனா என்பவர் ஒரு கருவிதான்; அவருக்குப் பின்னால் யாரோ இருந்து இயக்குகிறார்கள்” என்று மறைமுகமாக பாஜக-வைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

விஜய்யின் அரசியல் பயணம் சரியான பாதையில் செல்ல வேண்டும் என்றால், அவர் இது போன்ற வெளி அழுத்தங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்றும் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே திமுக கூட்டணியில் விசிக நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், விஜய்யைச் சாடும் வகையில் திருமாவளவன் பேசியிருப்பது அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.