தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) முழுமையான தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று சென்னையில் வெளியிட்டார். தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பிரதான கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற விழாவில், ‘மக்களின் தேர்தல் அறிக்கை’ என்ற பெயரில் கட்சியின் கொள்கை மற்றும் திட்டங்களை அவர் வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையின் முதல் பிரதியை விவசாயி நாராயணன் என்பவரிடம் விஜய் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, சமூகத்தின் பல்வேறு தரப்பினரைப் பிரதிபலிக்கும் வகையில் ஆசிரியை, ஆட்டோ ஓட்டுநர், அங்கன்வாடி ஊழியர், ஓய்வுபெற்ற காவல் அதிகாரி மற்றும் திருநங்கை ஆகியோரிடம் அறிக்கையின் பிரதிகளை அவர் வழங்கினார். அதன்பிறகு நிகழ்ச்சியில் தொண்டர்களிடையே உரையாற்றிய விஜய் பேசியதாவது,

“த.வெ.க. வேட்பாளர்களும் நானும் வேறுவேறல்ல. உங்கள் வீட்டுப் பிள்ளைகளைத்தான் நான் வேட்பாளர்களாகத் தேர்வு செய்திருக்கிறேன். அவர்களுக்கு நீங்கள் அளிக்கும் வாக்கு, உங்களுக்கு நீங்களே போட்டுக்கொள்ளும் வாக்காகும். வரும் மே 4-ஆம் தேதி தமிழகத்தில் புதிய ஒளி பிறக்க வேண்டும். உங்கள் வீட்டுப் பிள்ளையான எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள். தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு ஒரு வேண்டுகோள்: உங்கள் வீட்டு வாசலில் நமது ‘விசில்’ சின்னத்தை கோலமாக இடுங்கள். அதுவே எனக்கு நீங்கள் தரும் மிகப்பெரிய ஆதரவு என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தின் அனைத்து தொகுதிகளும் தமக்கு முக்கியமானவை என்றாலும், தாம் போட்டியிடும் தொகுதிகள் குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். நான் எங்கு வெற்றி பெற்றாலும், எனது தொகுதியான பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய பகுதிகளுக்கு மாதம் ஒருமுறை கண்டிப்பாக வருவேன்.  என்னைச் சந்திப்பது கடினம் என்று நினைக்க வேண்டாம்; மக்கள் என்னை மிக எளிதாகச் சந்திக்கலாம். உங்கள் தேவைகளை நீங்கள் கேட்காமலேயே செய்து கொடுப்பேன் என்றார்.

மேலும் இறைவன் மற்றும் இயற்கையின் துணையோடு தமிழக மக்களின் நம்பிக்கையைப் பெற்று நாம் ஆட்சிக்கு வருவது உறுதி. வெற்றி நிச்சயம்,” என விஜய் தனது உரையை நிறைவு செய்தார்.