தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, சென்னையில் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாட்களில் மதுபானக் கடைகளை மூட மாவட்டத் தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான ஜெ. குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் – 2026 அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் 2003-ன் படி, உரிமம் பெற்று இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் அனைத்தும் கீழ்க்கண்ட நாட்களில் செயல்படாது. அதன்படி வரும் 21.04.2026 (செவ்வாய்க்கிழமை) முற்பகல் 10 மணி முதல், வாக்குப்பதிவு நாளான 23.04.2026 (வியாழக்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை (தொடர்ந்து 3 நாட்கள்) செயல்படாது.
அதேபோன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 04.05.2026 (திங்கட்கிழமை) அன்று முழுவதுமாக கடைகள் மூடப்பட்டிருக்கும். இந்த நாட்களில் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான (IMFL) கடைகள் மட்டுமின்றி, FL-2 முதல் FL-11 வரை (FL-6 தவிர) உரிமம் பெற்ற அனைத்து மதுபானக் கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் குறிப்பிட்ட இந்த 4 நாட்களிலும் மதுபான விற்பனை முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. விதிகளுக்கு மாறாக எவரேனும் மது விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது பதுக்கி வைத்திருந்தாலோ அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
